Daily Tamil Motivational Quotes and Sayings


உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
- Goethe.

1. Daily Tamil Quotes and Sayings


1. நோய்க்கு முதல் மருந்து... தாய்!
2. முட்டாள்களில் பல ரகம். அதில் உயர் ரகம், அறிவாளி!
3. விருப்பம் இருந்தால், ஆயிரம் வழிகள். விருப்பம் இல்லாவிட்டால், ஆயிரம் காரணங்கள்!
4. எல்லாமே குற்றம் என்பவர்களுக்கு, ஏனோ குற்றம் சொல்வது மட்டும் குற்றமாகவே தெரிவதில்லை!
5. தொடர்ச்சியா சில உதவிகளைச் சிலருக்குச் செய்தால், அதை நம்ம கடமையாவே ஆக்கிருவாங்க ஒருநாள்!

Daily Tamil Motivational Quotes and Sayings



பாலகுமாரன் அவர்களால் எழுதப்பெற்ற "வெற்றி வேண்டுமெனில்” என்ற அற்புதமான கட்டுரைத் தொகுப்பில் உள்ள கீழ்க்கண்ட இந்த கருத்துக்கள் என் சிந்தை கவர்ந்தவை.

சோம்பல் ஒரு பழக்கம். படிந்துவிட்டால் நீக்குவது மிக மிகக் கடினம். சோம்பலற்று இருக்க இளம் வயதிலேயே பழக வேண்டும். முதன்மையாய் வருவது, புகழ்பெறுவது, பிறரால் பாராட்டப்படுவது என்பவைகளில் சுவை வேண்டும். தோல்வியைக் கண்டு கலவரம் வரவேண்டும்.

சோம்பல் பழக்கமானால், தோல்வி பழக்கமாகும். தோற்றுப் போனதற்கு ஆயிரமாயிரம் சமாதானங்கள் உள்ளே தோன்றும். அதிருஷ்டமில்லை என்றும், படிப்பில் இந்தத் தேர்வு முறையே தவறு என்றும் சொல்லத் தோன்றும்.

எந்த வேலை கொடுக்கப்பட்டதோ அதில் விருப்பத்தோடு வேலையில் ஈடுபடுபவர்கள் வெகு சிலரே. விருப்பத்தோடு வேலையில் ஈடுபடுவது ஒரு கலை.

மேஜை துடைப்பதோ, பந்தி பரிமாறுவதோ, வாயிற்காப்போன் வேலையோ, வெள்ளை அடிக்கிற தொழிலோ, அது உள்ளே புகுந்து விட்டால் அற்புதம் என்று பலரை சொல்ல வைக்க வேண்டும்.

விருப்பத்தோடு வேலை செய்வதுதான் வெற்றியின் முதல் படி.

தன்னை உற்றுப் பார்த்தல் என்ற விஷயத்துக்கு மிக அருகே இருக்கிறது வைராக்கியம் வளர்த்தல்.

வாழ்க்கை விதம்விதமான வேலைகளை மனிதர்கள் மீது சுமத்திக் கொண்டுதான் இருக்கும். மனிதர்கள் ஒரு குழுவாக மாறியபோது, ஒரு கூட்டமாக அமர்ந்தபோது அவரவர் பங்கிற்கு வேலைகள் பிரிக்கப்பட்டன.

சமூகத்தில் வேலை செய்யாது சோம்பி இருப்பது என்பது முடியாத காரியமாகப் போயிற்று. வேலை செய்துதான் தீர வேண்டும் என்று ஒரு நிர்பந்தம் ஏற்பட்டால், வேலையை திறம்பட செய்ய வேண்டும் என்ற அடுத்த நிர்பந்தமும் ஏற்படுகிறது.

எனவே, செய்கின்ற வேலையில் அலட்சியம் இல்லாமல், ஏனோ தானோ என்று நினைக்காமல் மிகவும் துல்லியமாக அவரவர் வேலைகளை முடிக்கின்ற அவசியம் ஏற்பட்டு விடுகிறது.

இவ்வேலைகளை செய்ய வேண்டும் என்றால் இதற்கு முனைப்பு தேவைப்படுகிறது. அந்த முனைப்பு தீவிரப்படுகிற போது அதற்குப் பெயர் வைராக்கியம்.

வைராக்கியம் என்பது தெளிவான பிடிவாதம். கோபமற்ற உறுதி.

இந்தப் பாடம் படித்தாக வேண்டும். இந்தப் பாடத்தை இன்று முடித்தால்தான் நாளைக்கு வேறு ஒரு பாடத்தை ஆரம்பிக்கலாம். இந்தப் பாடம் தான் நாளை வகுப்பிலும் நடத்தப்படும் என்று ஒரு திட்டம் இருப்பின் இன்றைய பாடத்தை இன்றே படிப்பது சிறந்தது.

டி.வி.யில் எனக்குப் பிடித்த நடிகர் பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார். பதிமூன்று வயது குழந்தைகள் விதம் விதம் விதமாய் பாட்டுப் பாடி ஆளை அசத்துகின்றன.

ஆனால் இன்றைய பாடத்தை யார் படிப்பது? உங்களை சுண்டி இழுக்க இந்த உலகத்தில் ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் உங்கள் விஷயம் எது? படிப்பது.

வைராக்கியத்தின் முன்பு நீங்கள் காணாமல் போகப் போகிறீர்களா? இல்லை, இதை பார்ப்பது என் வேலையில்லை. என்னுடைய இன்றைய பாடம், இன்றைய படிப்பு, இதுவே முக்கியம் என்று நகரப் போகிறீர்களா?

இதை நான் நிறைவேற்றியாக வேண்டும் என்று எப்பேற்பட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும் உதறிவிட்டு நகர்ந்து போனவர்கள்தான் உருப்பட முடியும்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறதென்றால், உணவு பற்றிய திடமான அபிப்ராயம் அவருக்கு வேண்டும். என்ன உண்ண வேண்டும், எவ்வளவு உண்ண வேண்டும் என்கிற தெளிவு மிக அவசியம்.

திருப்பதி லட்டை வெங்கடேசப் பெருமாள் கொடுத்தால் கூட வாங்கக்கூடாது. இனிப்பு கொடுக்கப்பட்டால் வாங்கி அடுத்தவரிடம் கொடுக்க வேண்டும். கையை சுத்தமாகத் துடைத்துவிட்டு நகர்ந்துவிட வேண்டும். இதற்குப் பெயர்தான் வைராக்கியம்.

கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபடவும் வைராக்கியம் மிக முக்கியமாய் தேவைப்படுகிறது.

ஒரு நாளைக்கு நூற்று இருபது சிகரெட்டுகள் பிடித்துக் கொண்டிருந்த நான், ரஜினிகாந்த் அவர்களின் சுருக்கென்ற கேலியை உள்ளுக்குள் எடுத்துக் கொண்டு மனம் மாறினேன்.

என் குருநாதர் யோகி ராம்சுரத்குமாரை வேண்டி, கெட்டப் பழக்கத்திலிருந்து விடுவித்து விடுங்கள் என்று கெஞ்சி வேண்டினேன்.

சிகரெட்டை நிறுத்திவிட்ட முதல்நாள் கடும் சோதனை. உதடுகளும், ஈறுகளும் பரபரத்து நிகோடின் வேண்டும் என்ற தகவலை அறிவித்துக் கொண்டிருந்தன.

முடியாது, முடியாது, முடியாது என்று மறுத்து ஒரு நாளைத் தாண்டியதும் நான் ஜெயித்துவிட முடியும் என்று எனக்குப் புரிந்து போயிற்று.

மறுநாள், அதற்கடுத்த நாள், மூன்று நாளும் பல்லைக் கடித்துக் கொண்டு போராட வேண்டியிருந்தது. நாலாம் நாள் உள்ளிருந்து வந்த வேண்டுகோளை அலட்சியப்படுத்தினேன். புகை ஆசையை கடுமையாய் புறக்கணித்தேன்.

இதற்கு பிறகு உள்ளிருந்து வேண்டுகோளே வரவில்லை. என் வாய், நாக்கு, ஈறுகள் ஆரோக்கியமாகிவிட்டன. சிகரெட் வாசனைக்கு அஞ்சின.

முதல் மூன்று நாட்கள் கடுமையாக வைராக்கியமாக மறுத்ததன் விளைவு, அந்த கெட்ட பழக்கத்திலிருந்து வெளியேறி ஆரோக்கியமானேன்.

வைராக்கியமாக இருக்க என்ன தேவை என்று நுணுக்கமாக ஆராய்ந்தால் ஒரு விஷயம் புரிபடும்.

எந்த ஒரு போராட்டமும் இருபத்திநாலு மணி நேரம்தான். சிகரெட்டை நிறுத்துவது, உணவு கட்டுப்பாடு, தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து விலகுவது, அத்தனையும் ஒருநாள் போராட்டம்தான்.

முன்னே இருந்தாலும் அந்த சத்தம் பின்னே தொடர்ந்து நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும். நம் கண்கள் டி.வி.யை பார்க்கவில்லை என்றாலும், மனம் டி.வி.க்கு முன்னே நின்று கொண்டிருக்கும்.

அதையும் பிடுங்கி, பாடத்தில் மனம் திரும்ப வேண்டும். சிகரெட்டை முடியாது என்று நிச்சயமாய் மறுத்துவிட வேண்டும். உடம்பை அழித்துக் கொள்ளாதே, நோயை வரவழைத்துக் கொள்ளாதே என்று அகற்ற வேண்டும்.

முதல் இருபத்தி நாலு மணிநேரம் போராடிவிட்டால், மூர்க்கமாக மறுத்துவிட்டால் அடுத்தபடி எந்தப் பாட்டு காதில் விழுந்தாலும், வேறு யார் சிகரெட் பிடித்தாலும், எதிரே இனிப்பு வைத்தாலும் மனம் அதை புறக்கணித்துவிட்டு தன் வேலையில் அழகாக மூழ்கிவிடும்.

வைராக்கியம் என்பது தன்னைத்தானே புடம் போட்டுக் கொள்வது. அதில் மூன்றாம் மனிதர் இல்லை.